புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கடன் வழங்கி 28 லட்சம் ரூபாய் மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை புதுநகர் பகுதியில் இயங்கி வருகிறது இந்தியன் வங்கி. இந்த வங்கி கிளையில் சரவணன் என்பவர் கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார் . இவர் வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக கால்நடை கடன் , கரும்பு பயிர் கடன், சேமிப்பு கடன் உள்ளிட்ட கடன்களை வழங்கி அதனை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் தனது நண்பர் ஒருவர் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து வாடிக்கையாளர்கள் சிலர் வங்கி நிர்வாகத்திற்கு அளித்த புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி நிர்வாகம் சிறப்பு தணிக்கை செய்த போது, மேலாளர் சரவணன் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து 2022 -ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் 28 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து புதுநகர் இந்தியன் வங்கி கிளையில் புதிதாக பொறுப்பேற்ற மேலாளர் கார்த்திக் பிரபு மாவட்ட குற்றப் தடுப்பு பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 28 லட்சத்து 51 ஆயிரம் மோசடி செய்த மேலாளர் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வோட்டையில் வங்கி மேலாளர் ஒருவரே வாடிக்கையாளரின் பெயரில் போலியாக கடன் வழங்குவது போல் வழங்கி ரூ.28 லட்சத்து 51 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா