பொங்கல் பரிசுத் தொகையை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக கணக்கு தொடங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாகவும், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், வரும் 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த முறை ரொக்கமாகவே வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பரிசுத் தொகையை நேரடியாக பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ள நிலையில், சுமார் 17 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே வங்கியில் கணக்கு இல்லாதவர்கள், புதிதாக கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கும் மாவட்ட மத்திய வங்கிகளில், வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாட பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை நேரடியாகவே, அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட உள்ளது.







