அரசியல் கட்சியினர் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை பரவுவதோடு, உருமாறவும் கொரோனாவும் பரவி வருகிறது. இந்த சூழலில் அதிக கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த சூழலில் 10க்கும் அதிகமானோர் கூடுவதே தவிர்க்கப்பட வேண்டும். ஆனால், பிரச்சாரக் கூட்டங்களில் 1000த்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். சமூக இடைவெளியும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இது தொடர்பாக நடவடிக்கை கோரியும் பயனில்லை. ஆகவே, கொரோனாவின் இரண்டாம் அலை மற்றும் உருமாறிய கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், 10க்கும் அதிகமான நபர்கள் கூட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். மேலும், கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் அரசியல் கட்சியினர் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.







