டெல்லி மாநில அரசு பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையை நம்பி லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். பேரியம் நைட்ரேட் பயன்படுத்த கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை பட்டாசு தொழில் சந்தித்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டாவது தடை நீக்கப்பட்டு பட்டாசு விற்பனை நல்ல முறையில் நடைபெறும் என்று பட்டாசு விற்பானையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் டெல்லி மாநில அரசு திடீரென வருகிற ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கும் விற்பதற்கும் தடை விதித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அரசு பிறப்பித்த இந்த உத்தரவு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்பவர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பட்டாசு உரிமையாளர்கள் கூறுகையில், சிவகாசி பகுதிகளில் உற்பத்தி செய்யக்கூடிய பட்டாசுகளில் 90 சதவீத பட்டாசுகள் வெளிமாநிலங்களுக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்பொழுது டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பட்டாசு தொழில் கடும் அழிவை நோக்கி செல்லக் கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் உடனடியாக டெல்லி முதலமைச்சரிடம் பேசி இந்த தடையை நீக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.







