சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை வீட்டில் இறக்கி விடுவதாக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று மூதாட்டியின் செயினை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகிலுள்ள உத்தமர் கோவில் பகுதியை சேர்ந்தவர்நளினி வசந்தா (வயது 73). மூதாட்டி வசந்தா இன்று மதியம் ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியிடம் ஏன் நடந்து செல்கிறீர்கள், நான் அழைத்து செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
உள் அன்போது அழைப்பதால், அதனை அப்படியே நம்பிய மூதாட்டி அந்த இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார். ஆனால் உதவி செய்வது போல் நாடகமாடிய அந்த இளைஞர் பாதி வழியில் சென்றதும், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு, சாலையிலேயே அவரை இறக்கி விட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மூதாட்டி வசந்தா, இளைஞரை விசாரிப்பதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் நளினி வசந்தா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வயதான முதியவர்களை குறிவைத்து செல்போன்கள் மற்றும் செயின் பறிப்பு சம்பவம் திருச்சியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்







