திருமணங்களும் பலவிதம்… மோசடிகளும் பலவிதம்…. பெண் குரலில் பேசி மோசடியை அரங்கேற்றிய “பலே” ஆசாமி சிக்கியது எப்படி? மோசடி நபரின் பரபரப்பு வாக்குமூலம்…. இதுகுறித்து விரிவாகக் காணலாம்.
மோசடிகள் பலவிதம். மோசடி செய்வோரும் பலவிதம். ஏமாற்றங்களும் பலவிதம். ஏமாற்றுவோர், ஏமாற்றப்படுவோரும் பலவிதம். இதில் திருமண பந்தங்களும் விதிவிலக்கக்கவில்லை என்பதுதான் வேதனை. இதுவரை திருமணம் செய்து கொடுத்த பிறகுதான் மணமகனோ, மணமகளோ மோசடி செய்துவிட்டதாக கூறி காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களின் வாசலுக்கும் பாதிக்கப்பட்டோர் ஏறி நியாயம் கேட்டு வந்தனர்.
சமீபகாலமாக திருமணங்களும், திருமணம் நிச்சயம் செய்வோரும் ஏமாற்றப்படுவதும், திருமண தகவல் மையங்களில் உள்ள தகவல்களை நம்பி திருமணம் செய்து ஏமாறுவது என பல்வேறு மோசடிகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இந்த மோசடியில் எவ்வித பாரபட்சமும் இன்றி ஆண்களும், பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.
கல்யாண ராமன் என்பவர் பெண் குரலில் பேசி திருமண மோசடியை அரங்கேற்றியதால் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கல்யாண ராமன் சென்னையைச் சேர்ந்த ரகுராம் என்பவரை ஏமாற்றி உள்ளார். ரகுராமின் தந்தை பாலசுப்பிரமணியனின் வாட்ஸ்அப் எண்ணிற்கு பெண்ணின் புகைப்படம் மற்றும் ஜாதகம் வந்துள்ளது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது செல்போனில் பேசிய நபர், தனது பெயர் கல்யாணராமன் என்றும் சேலத்தில் உள்ள தனது அண்ணனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு வரன் பார்த்து வருவதாகவும் ரகுராமின் விபரங்களை அனுப்புமாறும் கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய ரகுராமின் தந்தை பாலசுப்பிரமணியன் தனது மகனின் தகவல்களை அனுப்பியுள்ளார். கடந்த மே 22ம் தேதி ஐஸ்வர்யா, ரகுராமுக்கு போன் செய்து தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை, மருத்துவ சிகிச்சைக்கு பணம் வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி 8 ஆயிரம் ரூபாயை Google Pay மூலம் அனுப்பியுள்ளார் ரகுராம். பின்னர் தனது தாயாரின் மேல்சிகிச்கைக்கு பணம் வேண்டும் என ஐஸ்வர்யா பல முறை ரகுராமிடம் பேசி, சுமார் 21 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் ரகுராம் திருமண ஏற்பாடுகள் குறித்து ஐஸ்வர்யா மற்றும் கல்யாண ராமனிடம் கேட்டுள்ளார். அதற்கு தாயின் உடல்நிலையை காரணம் காட்டி தட்டிக் கழித்து வந்துள்ளார்.
சந்தேகமடைந்த ரகுராம், தான் சிகிச்சைக்காக கொடுத்த 21 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார். அதற்கு கல்யாணராமன், நீ எனது அண்ணன் மகளிடம் இரவு நேரங்களில் ஆபாசமாக பேசிய ஆடியோ என்னிடம் இருக்கிறது. பணத்தை கேட்டால் ஆடியோவை வெளியிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த ரகுராம், இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தத்தாதிரி என்பவர் தனது பெயரை கல்யாணராமன் என்றும், மணப்பெண் ஐஸ்வர்யா போலவும் பெண் குரலில் பேசி ரகுராமிடம் இருந்து சுமார் 21 லட்சத்தை பெற்று மோசடி செய்தது தெரிந்தது. ரகுராமிற்கு ஐஸ்வர்யா என்ற பெயரில் அனுப்பப்பட்ட மணப்பெண்ணின் புகைப்படம், நடிகையின் புகைப்படம் என்பது விசாரணையில் அம்பலமானது. கைது செய்யப்பட்ட தத்தாதிரி மெடிக்கல் ரெப்பாக வேலை செய்து வந்ததும், மோசடி செய்த பணத்தை ஆன்லைன் கேம் விளையாடி இழந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல, சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரை மதுரையை சேர்ந்த 23 வயதான அபிநயா என்பவர் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி கோயிலில் நடராஜன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அபிநயாவை திருமணம் செய்தார். கடந்த அக்டோபர் 19ம் தேதி அபிநயா, தீபாவளிக்காக எடுத்த புடவைக்கு சட்டை தைக்க வேண்டும். ஆகையால், கடையில் துணிகளை கொடுத்து விட்டு வரும்படி நடராஜனை அனுப்பினார். கடைக்கு சென்ற நடராஜன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, பூட்டப்பட்டிருந்தது.
அபிநயா வராததால் வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான் அவர் விலை உயர்ந்த திருமண பட்டுப்புடவை, 17 சவரன் தங்க நகைகள், 20 ஆயிரம் ரூபாயுடன் மாயமானது தெரியவந்தது. இது குறித்து நடராஜன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபிநயாவை செம்மஞ்சேரி பகுதியில் தனியார் பெண்கள் விடுதியில் வைத்து கைது செய்தனர். அபிநயாவுக்கு இது 6வது திருமணம் என்பது போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு திருமணம் செய்து ஏமாற்றும் மோசடிகள் பலமடங்காக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் சமூக மாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் தான் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். நல்ல மணமகன், நல்ல மணமகள் என்ற எதிர்பார்ப்பு மாறி நல்ல பொருளாதாரம், தனிக்குடித்தனம், பணவசதி உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் இருதரப்பினருக்கும் அதிகரித்துவிட்டது.
இந்த தகுதிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே திருமணம் என்ற நடைமுறை தற்போது உள்ளதால் நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு கூட திருமண வயதை தாண்டினாலும் திருமணம் செய்யமுடியாமல் இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுகின்றனர்.
இதை மோசடி பேர்வழிகள் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றத் தொடங்கிவிட்டனர். திருமணமான பெண்கள்கூட 2 ஆவது திருமணம், 3 ஆவது திருமணம் செய்துகொள்ள சம்மதம் என கூறி திருமணமும் செய்துவிட்டு திருமணமான மறுநாளிலேயே நகைகள், பட்டுபுடவைகளுடன் தலைமறைவாகிவிடும் மோசடிகள் அதிகரித்துவருகிறது என்கின்றனர் காவல்துறையினர்.
- சிவ.செல்லையா








