கடைசி ஒருநாள் போட்டி; வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா ஆறுதல் வெற்றி

இந்தியா-வங்கதேசத்திற்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில்…

இந்தியா-வங்கதேசத்திற்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து இந்தியா-வங்கதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று நடக்கிறது. தொடரை இழந்த இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதையடுத்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இணைந்துள்ளார்.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. இந்த போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித், தீபக் சகாருக்கு பதிலாக இஷன் கிஷன், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.

மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3வதாக இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்து இரட்டை சதத்தை கடந்து சாதனை படைத்தார். இறுதியில் 10 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகள் அடித்து, 210 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் இந்திய அணி எடுத்தது.

இதையடுத்து, 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 29 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் 43 ரன்னில் வெளியேறினார். யாசிர் அலி 25 ரன்னும், மகமதுல்லா 20 ரன்னும் எடுத்தனர். இறுதியில், வங்காளதேச அணி 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.