வடிவேலு ஸ்டைலில் கொள்ளை முயற்சி: புரியாத கையெழுத்தால் எல்லாம் போச்சு!

வடிவேலு ஸ்டைலில், மிரட்டல் கடிதம் கொடுத்து கொள்ளை அடிக்க முயன்ற வரின் கையெழுத்து புரியாததால், அந்த முயற்சி தப்பியது. நடிகர் வடிவேலு ’எலி’ என்ற படத்தில் வங்கிக்கொள்ளை காட்சியில் நடித்திருப்பார். வங்கிக்குள் செல்லும் அவர்,…

வடிவேலு ஸ்டைலில், மிரட்டல் கடிதம் கொடுத்து கொள்ளை அடிக்க முயன்ற வரின் கையெழுத்து புரியாததால், அந்த முயற்சி தப்பியது.

நடிகர் வடிவேலு ’எலி’ என்ற படத்தில் வங்கிக்கொள்ளை காட்சியில் நடித்திருப்பார். வங்கிக்குள் செல்லும் அவர், கேஷியரிடம் மிரட்டல் கடிதம் எழுதிக்கொடுத்து பணம் கேட்பார். ஆனால், தப்புத் தப்பாய் எழுதி இருப்பதாகக் கூறும் கேஷியர், சரியாக எழுதித் தரும்படி கேட்பார். இதே போன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது இங்கிலாந்தில்.

அங்குள்ள சூசக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆலன் ஸ்லாட்டரி (67). இவர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி, ஹாஸ்டிங்ஸ் பகுதியில் உள்ள வங்கி ஒன்றுக்குள் நுழைந்தார். நேராக கேஷியரிடம் சென்றவர், ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு, தெனாவட்டாக அவரை லுக் விட்டார். கடிதத்தை வாசிக்க முயன்ற கேஷியருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னய்யா எழுதியிருக்கே. கையெழுத்தே புரியலை. ஒழுங்கா எழுதிட்டுவா’என்று கூறியிருக்கிறார். அக்கம் பக்கம் ஆட்கள் இருந்ததால், சத்தம் போடாமல் போய்விட்டார் கொள்ளையடிக்க வந்த ஆலன்.

அவர் போனபிறகு, அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை கொஞ்சம் போராடி ஒருவாறு யூகித்தார் கேஷியர். அதாவது, ‘நீங்கள் வைத்திருக்கிற கேமரா எனக்கு வேண்டியதை தடுத்துவிடாது. பத்து மற்றும் இருபது பவுண்ட் நோட்டுகளை தர வேண்டும். இல்லை என்றால் மற்ற வாடிக்கையாளர்களை பற்றி நினையுங்கள்’ என்பதுதான் அந்த மிரட்டல் கடிதம். இதுபற்றி போலீசிடம் தெரிவித்ததும் அவர்கள் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மார்ச் 26 ஆம் தேதி, செயின்ட் லியோனார்ட்ஸில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்றார் ஆலன். அதே போல காசாளரிடம் சென்று மிரட்டல் கடிதத்தை நீட்டிவிட்டு, அதே ஸ்டைல் லுக் விட்டார். அங்கிருந்த பெண் காசாளர், அவர் எழுத்தைப் புரிந்துகொண்டு, கொஞ்சம் பயந்து நடுங்கி 2400 பவுண்டை கொடுத்தார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்.

தனது மிரட்டல் ஒர்க் அவுட் ஆன சந்தோஷத்தில் வெளியே வந்தார். வழக்கம்போல லேட்டாக வந்த போலீஸ், சிசிடிவி கேமரா கொண்டு விசாரணையை நடத்தி கிட்டத் தட்ட ஆலனை நெருங்கிவிட்டது.

பிறகு ஏப்ரல் 1 ஆம் தேதி ஹாவ்லாக் சாலையில் உள்ள நாட்வெஸ்ட் வங்கிக்கு சென்று அதே போல மிரட்டல் கடிதத்தை நீட்டினார். அங்கிருந்த கேஷியர் கொஞ்சம் போல்டானவர். ’அதெல்லாம் தரமுடியாதுப்பா, நீ என்ன வேணாலும் பண்ணிக்க’என்று சொல்லிவிட்டார். வெறுங்கையோடு திரும்பிய ஆலன் பற்றி இப்போது போலீசுக்கு தகவல் பறக்க, பிறகு அவரை வளைத்துப் பிடித்தனர்.

இந்த மூன்று குற்றங்களுக்காகவும் இப்போது அவருக்கு ஆறு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.