மேலூர் அருகே ஓடும் ஆம்புலன்ஸில் நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே சருகுவலையபட்டியைச் சேர்ந்த அரிச்சந்திரன் என்பவருடைய மனைவி நல்லம்மாள் (28). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மதுரை ஒத்தக்கடை சாலையில் அப்பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது இரண்டாவது பிரவசம் ஆகும். இதை ஆம்புலன்ஸ் ஊழியர் விமல் மற்றும் ஓட்டுநர் முனியாண்டி ஆகியோர் கவனமுடன் கையாண்டனர். தாயும், சேயும் நலமுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
-ம.பவித்ரா








