இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெண் மல்யுத்த வீராங்கனைகள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க அளிக்க வேண்டும் என்று WFL -க்கு விளையாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மல்யுத்த வீரர் வினேஷ் போகட் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகிய இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். இவர் பல ஆண்டுகளுக்கும் மேலாக பெண் மல்யுத்த வீராங்கனைகள் ,தேசிய பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாக பகிரங்க குற்றசாட்டை முன்வைத்து நேற்று போராட்டத்தில் குதித்தார். இவருக்கு அதரவாக 30 மல்யுத்த வீரர்களும் போராட்டத்தில் இறங்கினர். இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக நாட்டின் உயர்மட்ட மல்யுத்த வீரர்கள் கொண்டு வந்த இந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விளையாட்டு துறை அமைச்சகம் நேற்று ஏற்றுக்கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) மற்றும் அதன் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னணி வீரர்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உட்பட பல மல்யுத்த வீரர்கள் வியாழக்கிழமையான (ஜனவரி 19) இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2014 -ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், பாஜக தலைவருமான பபிதா போகட் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். மல்யுத்த வீரர்களுக்கு மத்திய அரசாங்கம் உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்தார். மேலும் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மல்யுத்த வீரர்களைச் சந்தித்த பிறகு,செய்தியாளர்களிடம் பேசிய போகட் “அரசு அவர்களுடன் இருப்பதாக நான் அவர்களுக்கு உறுதியளித்துள்ளேன். அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு நான் முயற்சிப்பேன், ”என்று கூறினார்.
இதற்கு முன்னதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ” இந்த மல்யுத்த விஷயத்தில் சக வீரர்களுடன் நான் நிற்கிறேன். ஒவ்வொரு மட்டத்திலும் இந்த பிரச்சினையை அரசாங்கத்திடம் எழுப்ப நான் பணியாற்றுவேன் என்றும், வீரர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்றும் உங்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன், என்று பபிதா தெரிவித்திருந்தார்.
இதேபோல் WFI இல் உள்ள வீரர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை வெளிக்கொணர எங்கள் நாட்டின் மல்யுத்த வீரர்கள் மிகவும் தைரியமான வேலையைச் செய்துள்ளனர். மேலும் இந்த உண்மைக்கான போராட்டத்தில் வீரர்களை ஆதரிப்பதும் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதும் நம் நாட்டு மக்கள் அனைவரின் கடமையாகும். ” என்று பபிதாவுடன் சென்றிருந்த , கீதா போகட் தனது ட்வீட்டில் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு, அடுத்த 72 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லை என்றா தேசிய விளையாட்டு மேம்பாட்டுக் குறியீடு, 2011-ன் விதிகளின்படி, கூட்டமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்த சர்ச்சையை அடுத்து, லக்னோவில் உள்ள SAI மையத்தில் தொடங்கவிருந்த தேசிய முகாமை விளையாட்டு அமைச்சகம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.