சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 14 சதங்கள் அடித்த ஹசிம் அம்லாவின் சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முறியடித்தார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. 2வது விக்கெட்டுக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். முதல் இரு போட்டிகளில் சோபிக்காத பாபர் அசாம், இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 14வது சதத்தை நிறைவு செய்த அவர், 139 பந்துகளில் 158 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தனது 81வது இன்னிங்ஸில் 14வது சதத்தை நிறைவு செய்த அவர், தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை முந்தினார். ஹசிம் அம்லா 84வது இன்னிங்ஸிலும், வார்னர் தனது 98வது இன்னிங்ஸிலும், இந்திய கேப்டன் விராட் கோலி 103வது இன்னிங்ஸிலும் 14வது சதத்தை அடித்திருந்தனர்.
பாபர் அசாமின் சதத்தால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 331 ரன்கள் குவித்தது. அந்த அணி நிர்ணயித்த 332 ரன்கள் இலக்கை 48 ஓவர்களில் எட்டிய இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.








