மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த பாகுபலி யானை சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி அங்கு இருந்த யானை சிலையை சேதப்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக வனத்தை விட்டு வெளியே வராமல் இருந்த ஆண் காட்டுயானை பாகுபலி மீண்டும் ஊருக்குள் நடமாட தொடங்கியுள்ளது. 4 நாட்களுக்கு முன் சமயபுரம், ஓடத்துறை, கோத்தகிரி சாலையில் பாகுபலி யானை சுற்றித்திரிந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சாலை ஓரத்தில் சென்ற பாகுபலி யானை. திடீரென அரசு வனக் கல்லூரி வளாகத்தில் நுழைய முயன்றது.
அப்போது வனக் கல்லூரி சுற்றுச் சுவர் எதிரே இருந்த நிலையில் அந்த சுற்று சுவரை இடித்து சேதப்படுத்தி உள்ளே சென்றது. பின்னர் அங்கு அழகுக்காக கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த யானை சிலையையும் சேதப்படுத்தியது. பின்னர் தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் யானையை விரட்டியடித்தனர். இதனிடையே யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





