நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள குடிநீர் திட்ட பணிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் புகைப்படம் இடம் பெறாததைக் கண்டித்து, பாஜக-வினர் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிப் பகுதியில், குடிநீர் திட்ட விரிவாக்க பணிக்காக மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டதிற்கான அடிக்கல் பூமி பூஜை நிகழ்ச்சி நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்ட பேனரில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெறவில்லை. இது குறித்து பா.ஜ.க வினர் நகராட்சி ஆணையாளரிடம் முறையிட்ட போது முறையாக எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை எனக் கூறி, நகராட்சி அலுவலகம் முன்பு சேலம் செல்லும் சாலையில் பா.ஜ.க நிர்வாகிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
—சௌம்யா.மோ






