அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மேற்கு மாம்பலத்தில் ‘ஸ்ரீராம் சமாஜ்’ என்ற அமைப்பின் சார்பில் 1954-ல் அயோத்யா மண்டபம் கட்டப்பட்டது. இதனை, நிர்வகித்து வந்த அமைப்பு, நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து, கடந்த 2013-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவரும் வகையில் தக்காரை நியமித்து அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ஸ்ரீராம் சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி வி.எம். வேலுமணி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
கோயில் என்பதற்கான தீர்க்கமான எந்த காரணங்களும் கூறாமல் அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவு ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அறநிலையத்துறையின் உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவும், கோவிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நியமித்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








