2014-ஆம் ஆண்டு பதவியேற்றபோது இருந்த அளவுக்கு பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலளித்துள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு அரசு 2021-செப்டம்பரில், பெட்ரோல் விலையை குறைத்தது எனவும், பெட்ரோல் விலை குறைப்பின் மூலம் தமிழக மக்களுக்கு லிட்டருக்கு ரூ.3 நிவாரணம் கிடைத்ததாகவும், இதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2014-ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்றதில் இருந்து 7 ஆண்டுகளாக பெட்ரோல் மீதான வரிகள் உயர்ந்துள்ளதாகவும், இதனால் மாநிலங்களுக்கு வருவாய் அதிகரிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அவர், 2020-21இல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலம் மத்திய அரசுக்கு வருவாயாக ரூ.3,89,622 கோடி கிடைத்துள்ளது எனவும், இந்த வருவாயை 2019-20 ஆண்டுடன் ஒப்பிடும்போது 63% அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு மத்திய அரசிடமிருந்து பெறும் வரிப்பங்கீட்டில் 2019-20 இல் ரூ.1,163.13 கோடி பெற்ற நிலையில், 2020-21இல் ரூ.837.75 கோடி மட்டுமே கிடைப்பதாக தெரிவித்துள்ள அவர், விதிக்கப்படும் செஸ் வரியை குறைத்து, அடிப்படை வரி விகிதங்களுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘அயோத்யா மண்டபம்: அறநிலையத்துறை உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்’
மேலும், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கான கால அவகாசம் 30.06.2022 முடிவடைவதாக தெரிவித்துள்ள அவர், ஜி.எஸ்.டி இழப்பீடு தொடரும் அல்லது தொடராது என்பது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தத் தெளிவும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
விதிக்கப்படும் செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர் எளிமையான மற்றும் நியாயமான அணுகுமுறையை தாங்கள் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








