கோடநாடு வழக்கு- சசிகலாவிடம் நாளை விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கை ஐஜி சுதாகர்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்தவுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கை ஐஜி சுதாகர் தலைமையிலான 5 தனிப்படை போலீசார் நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினரான விவேக், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் சசிகலா உட்பட 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவரான சசிகலாவிடம் நாளை காலை 10 மணி அளவில் தனிப்படை போலீசார் சென்னையில் வைத்து விசாரணை நடத்த உள்ளதாக ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார். மேலும் கோடநாடு எஸ்டேட்டில் காணாமல் போன பத்திரங்கள் சென்னையில் கைப்பற்றப்பட்டது தொடர்பாகவும், காணாமல் போன ஆவணங்கள் பொருட்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு முன்பே நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.