மயிலாப்பூர் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தமிழறிஞர் அவ்வை நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். கடந்த சில மாதங்களாகவே அவ்வை நடராஜன் நீரிழிவு நோயால் அவதியடைந்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடையவே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 85. இவரது மறைவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதோடு, அவ்வை நடராஜனின் தமிழ்ப் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று (நவ.22) மாலை, மயிலாப்பூர் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் தமிழறிஞர் அவ்வை நடராஜனின் உடலைச் சுமந்து சென்றனர்.







