இந்தியா – நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி சமனில் முடிந்ததை அடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. அதன்படி டி20 தொடரானது கடந்த நவம்பர் 18ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டி, மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ரத்தானது. நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.
இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான கான்வே அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். ஆனால் மற்ற வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் க்ளென் ஃபிலிப்ஸ் 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இறுதியாக நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கியது. 9 ஓவர்கள் ஆடிய நிலையில், ஆட்டம் மழையால் தடைபட்டது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 9 ஓவர்களுக்கு 75 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி சரியாக 75 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டி20 போட்டி சமனில் முடிந்ததால், இந்தியா 1-0 என்ற கணக்கில் இந்தத் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.







