திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் வளாகத்தில் அமாவாசை இரவு முழுவதும் தங்கி அதிகாலையில் அம்மனை தரிசிக்க ஏராளமான பெண்கள் காத்திருந்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் திகழ்கிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கோயில் வளாகத்தில் பெண்கள் தங்கி அதிகாலை மாரியம்மனை தரிசித்து சென்றால் பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அதன் அடிப்படையில் ஆவணி அமாவாசையான நேற்று இரவு எராளமான பெண்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் இரவு முழுவதும் தங்கியிருந்து அதிகாலையில் அம்மனை தரிசித்து சென்றனர்.
இதனிடையே கோவில் வளாகத்தில் தங்க வந்திருந்த பெண்களுக்கு கோயில் நிர்வாகம் போதிய வசதி ஏற்படுத்தி தராததால் பாதுகாப்பற்ற திறந்த வெளியிலே சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை படுத்து உறங்கினர். இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்ட பொழுது பக்தர்கள் தங்குவதற்காக கட்டி முடிக்கப்பட்ட அமாவாசை மண்டபத்தில் அன்னதான கூடம் செயல்படுவதால் பக்தர்கள் திறந்தவெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
சூடம், நெய் விளக்கு ஏற்றும் இடத்தில் பசு மாடுகள் பக்தர்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.







