தமிழ்நாட்டில் முதல் முறையாக தானியங்கி மஞ்சப்பை இயந்திரம்!!!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோயம்பேடு சந்தையில் மஞ்சப்பை தானியங்கி  இயந்திரத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு திறந்து வைத்தார்.  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில்…

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோயம்பேடு சந்தையில் மஞ்சப்பை தானியங்கி  இயந்திரத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு திறந்து வைத்தார். 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை மக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் சார்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மஞ்சப்பை மக்கள் கையில் எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் செயலாளர் சுப்ரியா சாகு திறந்து வைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு, P1 & P2 என்று இரண்டு வகையான பொத்தான்கள் மூலம் இரண்டு வகையான மஞ்சப்பைகளை இந்த இயந்திரம் உள்ளடக்கி இருக்கிறது. P1 அல்லது P2 என்ற பொத்தானை அழுத்தி பத்து ரூபாய் நோட்டு அல்லது காசை இயந்திரத்தின் உள்ளே செலுத்தும் போது மஞ்சப்பை மக்கள் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரம் மக்கள் பயன்படுத்த எளிதாகவும் சிரமமின்றியும் இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் கூடும் மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் இந்த தானியங்கி இயந்திரம் நிறுவப்படும் என்றார்.

இந்த தானியங்கி இயந்திரத்தை திறந்து வைத்த சில மணி நிமிடங்களிலேயே அதிக அளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்தி மஞ்சப்பைகளை எடுத்துச் சென்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.