இரவு நேரத்தில் Rapido ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் கோவையில் கடந்த பத்து மாதங்களாக தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் சென்ற இளம் பெண் கோவை திரும்ப இரவு தாமதம் ஆகியிருக்கிறது. நள்ளிரவு 12:30 மணியளவில் பேருந்து மூலம் கோவையை அடைந்த இளம் பெண், பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் இறங்கி ரேபிடோ செயலி மூலம் ஆட்டோ ஒன்று புக் செய்துள்ளார்.
ஆட்டோ வந்தவுடன் ஆட்டோவில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆட்டோவை நிறுத்துமாறு அந்த இளம் பெண் கூறுவதை கேட்காமல் தொடர்ந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றதால், அந்த நபரிடமிருந்து தப்பிக்க முயன்ற இளம் பெண் ஆட்டோவிலிருந்து வெளியே குதித்துள்ளார்.
இதில் தலை மற்றும் கால்களில் காயம் அடைந்த பெண் இது தொடர்பாக தனது நண்பர்களுக்கு அழைத்ததை தொடர்ந்து, விரைந்து வந்த நண்பர்கள் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர்.
இது தொடர்பாக அந்த பெண், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி அத்துமீறலில் ஈடுபட்ட நபர் உக்கடம் பகுதியைச்சேர்ந்த முகமது சாதீக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து முகமது சாதிக்கை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







