பா.ரஞ்சித்தை ஆரத் தழுவி பாராட்டிய பாலிவுட் இயக்குநர்; யார் இந்த அனுராக் காஷ்யப்?

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் நடிப்பில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ள “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் ஸ்பெஷல் ஷோ மும்பையில் திரையிடப்பட்டது. அதில் “கேங்ஸ் ஆஃப் வஸேபூர்”…

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் நடிப்பில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ள “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் ஸ்பெஷல் ஷோ மும்பையில் திரையிடப்பட்டது.

அதில் “கேங்ஸ் ஆஃப் வஸேபூர்” இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை, இயக்குநர் நந்திதா தாஸ் பங்கேற்றினர். அத்திரையிடலின் முடிவில் அனுராக் காஷ்யப், பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்துப் பாராட்டிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யார் இந்த அனுராக் காஷ்யப், இவருக்கும் தமிழ் சினிமாவிற்கும் என்ன தொடர்பு என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழில் “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழ் மக்களின் கவனத்தைப் பெற்றவர் அனுராக் காஷ்யப். இவரது முதல் படமான “பாஞ்ச்” தொடங்கி ராமன் ராகவ் 2.0 வரை இவர் சந்திக்காத சர்ச்சையே இல்லை எனலாம். இவரின் படங்கள் பெற்ற சென்சார் கட் ஏராளம்.

பாஞ்ச் படத்தில் உள்ள வன்முறை மற்றும் போதைப் பொருள் காட்சிகளுக்காகத் தடை விதித்தது அப்போதைய சென்சார் போர்டு. சர்வதேச திரைப்பட விழாவில் இவரது படங்கள் எப்போதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வஸேபூர், உலக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது அவருக்கு மேலும் உலகப் புகழ் சேர்த்தது.

இவர் Sacred Games என்ற இணையத் தொடரை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார் என்பது கவனத்துக்குக்கூரிய ஒன்று. இவர் இந்திய சினிமாவிற்கு ஆற்றிய பணிகள் ஏராளம்…

இவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன தொடர்பு?

அனுராக் காஷ்யப்பிற்கு தமிழ் மற்றும் மலையாள சினிமா மீது அதிக ஆர்வம்.

சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், நான் கடவுள் ஆகிய இம்மூன்று திரைப்படங்களே தனது உலகப் புகழ் பெற்ற “கேங்ஸ் ஆஃப் வஸேபூர்” படத்தின் இன்ஸ்பிரேஷன் என்றும் நான் கடவுள் படம் தான் வாழ்ந்த காசியை வேறு கோணத்தில் பார்க்கவைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் கேங்ஸ் ஆஃப் வஸேபூர் படத்தின் தொடக்கத்தில் “To the Madurai Triumvirate” என்று இயக்குநர் பாலா, அமீர், சசிகுமார் இம்மூவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் படத்தின் தணிக்கை செய்யப்படாத பாகம் இவரிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனக்கு குணா, விருமாண்டி, தேவர் மகன் படங்கள் மிகவும் பிடித்த படங்கள் என்றும் அழகர் சாமி குதிரை, களவாணி படங்களைத் தான் சப்டைட்டில் இல்லாமல் பார்த்ததாகவும் தான் தமிழ் சினிமா மேல் வைத்துள்ள காதலை மிகைப்படுத்திக் கூறியுள்ளார்.

நட்சத்திரம் நகர்கிறது பார்த்த பிறகு அனுராக், ரஞ்சித் இயக்கிய படங்களிலே தனக்கு இப்படம் மிகவும் பிடித்ததாகவும் மேலும் ரேனே கதாபாத்திரம் ரஞ்சித்தைப் பிரதிபலிப்பதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரக் காத்திருக்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் இந்த நிகழ்வுக்குப் பிறகு மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.