அறுவடை முடிந்த பின் என்எல்சி நிர்வாகத்திடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

என்.எல்.சி. நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்  என்றும், புதிதாக பயிரிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகத்தின் சுரங்க விரிவாக்க பணிக்காக…

என்.எல்.சி. நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்  என்றும், புதிதாக பயிரிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகத்தின் சுரங்க விரிவாக்க பணிக்காக வாய்க்கால் வெட்டும் பணியின் போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி முருகன் என்ற விவசாயி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 88 விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது என்று என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருணைத் தொகை வாங்காதவர்களுக்கு கருணைத் தொகை வழங்குவதற்காக அரசு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தொகை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விவசாயத்தை முடித்து அறுவடை செய்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், நிலத்தில் புதிதாக பயிரிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்த நீதிபதி, தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.