சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். இவர் கடந்த 2006 ல் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த நபர்கள் அவரை கொலை செய்ய முயன்றனர். உடனடியாக சி.வி. சண்முகம் காருக்கு அடியில் புகுந்து உயிர் தப்பினார். ஆனால், அவரது உறவினரும், அதிமுக தொண்டருமான முருகானந்தம் கொலைசெய்யப்பட்டார்.
இக்கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பாக பாமகவைச் சேர்ந்த சீனுவாசன், கருணாநிதி, குமரவேல் பிரதீபன் உள்ளிட்ட 20 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து இவர்கள் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2011ல் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2014ல் திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 15 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 28ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக் இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் நிரபராதி என தீர்ப்பளித்து,  அவர்கள் அனைவரும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.