மார்பில் கத்தியால் தாக்கி வினோத நேர்த்திக்கடன் – ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு..!

குமாரபாளையத்தில் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு மார்பில் கத்தியால் தாக்கி நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த…

குமாரபாளையத்தில் தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு மார்பில் கத்தியால் தாக்கி நேர்த்திக்கடன் செலுத்தும் திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த கன்னட மொழி பேசும் மக்கள் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் வரும் நாள் அன்று பூணூல் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதனை ஒட்டி நேற்று பூணூல் திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குமாரபாளையம் 18 பட்டி கிராமத்திற்கு சொந்தமான காளியம்மன் கோயிலில் இருந்து பாண்டுரங்கன் கோயிலுக்கு அம்மை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது வீரகுமாரர்கள் தங்கள் மார்பில் கத்தியால் தாக்கி அம்மை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது சாமுண்டி வேடம் அணிந்த இரண்டு வீரர்கள் அம்மை அழைப்பு நிகழ்ச்சியை தடுப்பது போலவும், அதற்கு வீரகுமாரர்கள் அந்த சாமுண்டி வீரர்களை தடுத்து நிறுத்தி அம்மை அழைப்பை நடத்துவது போலவும் சித்தரிக்கும் வகையில் நடனம் ஆடினர்.மேலும் தங்களின் இஷ்ட தெய்வமான இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தங்கள் குலத் தொழிலான பட்டு நெசவுக்கு தேவையான பட்டு நூலை வழங்குவதற்கு நன்றி செலுத்தும் விதமாக கடந்த 15 தினங்களாக கடுமையான விரதம் இருந்து மஞ்சள், நீளம், பச்சை நிற ஆடை அணிந்து இசைக்கு தகுந்தவாறு நடனமாடி தங்கள் மார்பில் கத்தியால் தாக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நான்கு வயது சிறுவன் முதல் 60 வயது முதியவர் வரை காவல் தெய்வமாக சௌடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சௌடேஸ்வரி அம்மனை வழிபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.