ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்… முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், நேபாள அணிகள் பலப்பரீட்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபால் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபால் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் 50 ஓவர் பொட்டிகளாக நடைபெறவுள்ளது.

தொடக்க நாளான இன்று பாகிஸ்தான், நேபால் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்கப்பட உள்ளது. நேபாளம் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவது இதுவே முதல் முறையாகும். கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தான் அணியை சர்வதேச களத்தில் எதிர்கொண்டு விளையாடுகிறது நேபாளம்.

பாபர் ஹசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அண்மையில் சர்வதேச ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் ஆஸியை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை அபாரமாக கைப்பற்றியதன் அடுத்த பயணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை சந்திக்க களமிறங்குகிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அணியை பொறுத்த வரை இன்று விளையாடும் 11 பேர் கொண்ட குழுவை நேற்றைய தினமே அறிவித்துவிட்டது. அதன் படி ஃபக்கர் சாமான், இமாம் உல் அக், பாபர் ஹாசாம் (கேப்டன்), முஹம்மது ரிஸ்வான், அஹா சல்மான், இப்டிகார் அஹ்மது, சதாப் கான், முகமது நவாஸ், சாயின் அப்ரிதி, நசீம் சாஹ், ஹரீஷ் ராப் ஆகியோர் அணியில் இன்று விளையாடுகின்றனர்.

நேபாளத்தை பொறுத்த வரை அந்த அணிக்கு இன்றைய போட்டி சவாலாக இருந்தாலும் வெற்றியோ, தோல்வியோ, ஏதுவாக இருந்தாலும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெறும் கனவுடன் இந்த தொடரில் அனுபவம் வாய்ந்த அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. முன்னதாக பெரும் சர்வதேச அனுபவம் இல்லாத ஒரு அணியாக களமிறங்கும் நேபால் இதற்கு முன்னதாக தான் சந்தித்த கடைசி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. மேலும் தரவரிசை பட்டியலில் 15 ஆவது இடத்தில் உள்ளது.

எனவே இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் நேபால் அணி கணிப்பின் அடிப்படையில் குஷால் புருடல், ஆசிப் ஷேக், பீம் ஷாரிக், ரோஹித் பவுடல்(கேப்டன்), குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பல் கமி, கரன் கே சி, சந்தீப் லமிச்சென், லலித் ராஜ்பன்சி ஆகியோர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது.

இன்று தொடங்கும் ஆசிய கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி தினசரி தலா ஒரு போட்டியாக, போட்டிகள் அனைத்து மதியம் 3 மணியளவில் நடைபெறும். 1984 முதல் 2022 வரையிலான தொடர்களில் இந்திய அணியே 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.