திருநின்றவூரில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இடைத்தரகர் 6 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரை சேர்ந்தவர் சேஷாத்திரி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் உள்ள எடிஎம்மில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக கையில் சுத்தியுடன் அந்த பகுதியில் சுற்றிய அவர் அந்த பகுதியில் உள்ள வெவ்வேறு வங்கிகளை சேர்ந்த 6 ஏடிஎம் எந்திரங்களை உடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க தெரியாததால் கையில் இருந்த சுத்தியுடன் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 6 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







