காஞ்சிபுரம் அருகே மது போதையில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் TaTa Indicash என்ற ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இரண்டு எந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிகாலை வேளையில் ஏடிஎம் மையத்தில் ஒரு எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தன.
தகவலின் பேரில் பாலு செட்டி சத்திர பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது ஏடிஎம் எந்திரத்தின் பொத்தான்களை அழுத்தும் கீழ் பகுதியில் உள்ள தகரக் கதவு திறந்தபடி இருந்து உள்ளது. மேலும் ஏடிஎம் எந்திரத்தின் கீழ் பக்கத்தில் உள்ள கண்ட்ரோல் யூனிட் திறக்கப்படாமல் இருந்ததால் பணம் தப்பியது. இது குறித்து போலீசார் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் உள்ள பதிவினை அப் பகுதியில் உள்ள பல தரப்பினரிடையே காண்பித்து கொள்ளை அடிக்க முயன்ற நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளை அடிக்க முயன்ற நபரை போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில் பாலு செட்டி சத்திரம் அடுத்த முசரவாக்கம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் தெரியவந்தது. மது போதையில் கொள்ளை அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
—கோ. சிவசங்கரன்







