ஈரோட்டில் காவலர்கள் நடத்திய வாகன தணிக்கையில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்களம் சோதனை சாவடி அருகே பெருந்துறை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து வேன் ஒன்றுக்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பார்சல் பண்டல்களை சில நபர்கள் சாலை யோரமாக எடுத்து சென்றுள்ளனர். இதனை கண்ட காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்தப்போது, அங்கிருந்த இருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதனை அடுத்து பார்சல் பண்டல்களை பிரித்து பார்த்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணை மேற்கொண்டதில், இந்த குட்கா பொருட்கள் பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு கடத்தி வரப்பட்டது என்றும் அதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் எனவும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கடத்தலில் பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் ரவி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







