பிகார் மாநிலத்தில் குடிப்பதற்காக பயணிகள் ரயிலை ஒரு மணி நேரம் நிறுத்திவைத்திருந்த ரயில் ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் டீ குடிப்பதற்காக ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் சிசிடிவி மூலம் வைரலாகி வந்தது. இந்நிலையில், குடிப்பதற்காக ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பிகார் மாநிலத்தில் சமஸ்திபூர் – சஹார்சா உள்ளூர் ரயில் ஒரு மணி நேரம் தாமதமான நிலையில், புறப்படாமல் நின்றுள்ளது. ரயில் ஓட்டுநரையும் காணவில்லை. இதுகுறித்த தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர் ஓட்டுநரைத் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, ரயில் ஓட்டுநர் குடித்துவிட்டு வந்துள்ளார். இதையடுத்து, அந்த பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சமஸ்திபூரிலிருந்து இயக்கப்பட்டது.
இதுகுறித்து, சமஸ்திபூர் ரயில்வே மேலாளர் அலோக் அகர்வால் கூறுகையில், ரயில்வே ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.








