தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு – அமைச்சர் சாமிநாதன் பேட்டி!

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களில் தமிழிலேயே பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆண்டகலுார்கேட் பகுதியிலுள்ள அருள்மிகு காசிவிநாயகர் தியான…

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களில் தமிழிலேயே பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆண்டகலுார்கேட் பகுதியிலுள்ள அருள்மிகு காசிவிநாயகர் தியான மண்டபத்தில் ”எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” மாநாடு மற்றும் உலகத் தமிழ் பெயர்கள் பேரியக்கம் தொடக்க விழா நடைபெற்றது.  இந்த மாநாட்டில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
பல்வேறு தமிழ் தலைப்புகளில்  தமிழ் அறிஞர்கள் சாந்தலிங்க மருதாசல அடிகளார், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் ஆகியோர் பேசினர்.
பின்னர் மாலையில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உலகத் தமிழ் பெயர்கள் பேரியக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியல் பேசிய அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 13 மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் பெயர் பலகைகள் தமிழில் வைப்பது குறித்து கண்காணிக்கப்பட்டு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.  இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
—அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.