வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் ரூ.10,000 கேளுங்கள்: சீமான்

லாபம் ஈட்டும் தொழிலாக அரசியல் மாற்றப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின்…

லாபம் ஈட்டும் தொழிலாக அரசியல் மாற்றப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் நிரந்தரியை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.

தற்போதைய கட்சிகள் அரசியலை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளனர் இதனை நாங்கள் மாற்ற நினைக்கிறோம் என பேசினார்.நாட்டில் சரியான சமமான கல்வியை கொடுக்க வேண்டும், தனியார் முதலாளிகளால் தரமான கல்வியையும் தண்ணீரையும் விலைக்கு விற்கும் பொழுது அரசு ஏன் இலவசமாகவும் தரமாகவும் கொடுக்க முடியாது என்று கேள்வி எழுப்பிய அவர், நாங்கள் கல்வி மற்றும் தண்ணீரை இலவசமாக வழங்க நினைக்கிறோம் என்றார்.

நான் சீட்டுக்கு பேரம் பேசினேன், ஊழலுக்கு துணை போய் விட்டேன் என யாராலும் என்னை குற்றம் சாட்ட முடியாது என்ற சீமான் நாங்கள் வாக்குக்கு பணம் தர மாட்டோம், எங்களிடம் கொடுப்பதற்கு பணம் இல்லை, பணம் இருந்தாலும் வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கத்தை நாங்கள் ஏற்படுத்த மாட்டோம் என்றார். மேலும், யாரேனும் வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கேளுங்கள் எனவும் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.