தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் நீட் முறைகேடுகள் எதுவும் நிகழவில்லையா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
கேரளாவின் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ” நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
மேலோட்டமான புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், தமிழகத்தில் மட்டுமே நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

பிற மாநிலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் நிகழவில்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விவரங்களை சிபிஐ அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வுகளில் பயோமெட்ரிக் முறையில் மாணவர்கள் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதி நிர்மல் குமார் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை ஏப்ரல் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.







