திமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்!

இன்று வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில், ஏற்கெனவே போட்டியிட்ட 14 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை தொகுதியில் மைதீன்கானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் அப்துல் வகாப் களம் இறங்குகிறார். புதுக்கோட்டையில் பெரியண்ணன்…

இன்று வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில், ஏற்கெனவே போட்டியிட்ட 14 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை தொகுதியில் மைதீன்கானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதில் அப்துல் வகாப் களம் இறங்குகிறார். புதுக்கோட்டையில் பெரியண்ணன் அரசுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், மருத்துவர் முத்துராஜாவுக்கும், குளித்தலை தொகுதியில் ராமருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மாணிக்கத்திற்கும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் கூடலூர் தொகுதியில் திராவிடமணிக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, எஸ்.காசிலிங்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தளி தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிட்ட நிலையில், தற்போது அந்தத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட புகழேந்திக்கு பதிலாக, மதிமுக சார்பில் மல்லை சத்யாவுக்கும், செய்யூர் தொகுதி செய்யூர் அரசுக்கு பதிலாக, கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

வேளச்சேரி தொகுதியில் கடந்த தேர்தலில் வாகை சந்திரசேகர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது அந்த தொகுதி கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கீழ்வேளூர் தொகுதியானது திமுக சார்பில் வெற்றி பெற்ற மதிவாணனுக்கு பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம், பாஜகவுக்கு மாறிய நிலையில், அந்த தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன் களம் இறங்குகிறார். திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற
ஜெ. அன்பழகன் மரணமடைந்த நிலையில், அந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தற்போது களம் இறங்கிறார். இதேபோல் எழும்பூர் தொகுதியானது ரவிச்சந்திரனுக்கு பதிலாக, பரந்தாமனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான ரங்கநாதனுக்கு சீட் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், வெற்றியழகனுக்கு அந்தத் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவொற்றியூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வென்ற கே.பி.பி.சாமி மரணமடைந்த நிலையில், அந்த தொகுதியில் கே.பி.சங்கர் வேட்பாளராகக் களம் இறங்குகிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 12 பெண்கள், 9 மருத்துவர்கள், 3 இஸ்லாமியர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.