ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்; வழக்கறிஞர்கள் கைது

உணவகம் முன்பு குடித்துவிட்டு வாந்தி எடுத்ததை ஊழியர்கள் தட்டி கேட்டதால் ஊழியர்களை இரும்பு ராடு கொண்டு தாக்கிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மெட்ராஸ் தாபா என்ற உணவகம்…

உணவகம் முன்பு குடித்துவிட்டு வாந்தி எடுத்ததை ஊழியர்கள் தட்டி கேட்டதால் ஊழியர்களை இரும்பு ராடு கொண்டு தாக்கிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மெட்ராஸ் தாபா என்ற உணவகம் இயங்கி வருகிறது.நேற்று இரவு இந்த உணவகத்தின் முன்பு சில நபர்கள் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போதே குடிபோதையில் இருந்த ஒருவர் உணவகம் முன்பு வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உணவகத்தின் ஊழியர் சற்று தள்ளிச் செல்லுமாறு கூறியுள்ளார்.அப்போது தனது நண்பர்களுடன் நின்ற அந்த நபர் கடை ஊழியர்களை ஆபாசமான வார்த்தைகளை கூறி திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் கடையின் உரிமையாளர் குகன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் காவல்துறையினர் வந்து சேர்வதற்குள் பிரச்சனையில் ஈடுபட்ட அந்த நபர் தொலைபேசி மூலம் மேலும் சில நபர்களை வரவழைத்து திடீரென உணவக ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.கடையின் ஊழியர்களை தாக்கியதால் கடையின் உரிமையாளர் குகன் ஓடி சென்று தடுக்க முயன்றார். அப்போது, உணவகத்தின் வழியில் இருந்த கத்தி இரும்பு கம்பிகளை எடுத்து அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு நபர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.அவர்கள் இருவரும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

ராயபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் உணவகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் திவாகர் என்பது தெரியவந்தது.மேலும் காமேஸ்வரன், லோகேஸ்வரன், தீபக் ஆகிய மூவரும் தலைமறைவாக இருப்பதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் உட்படஅனைவரும் பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த உணவகத்தின் உரிமையாளர் 60 வயதான குகன் தலையில் கத்தி, இரும்பு கம்பியால் தாக்கியதில் 13 தையல்கள் போடப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் இருவரும் காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.