மாநில மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தங்கள் மாநில அரசுகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பது தொடர்பாக மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் நேற்று (நவ.15) ஆலோசனை மேற்கொண்டார்.
15 மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.
நாட்டில் கொரோனாவால் சரிவை சந்தித்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்தும் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை எளிமையாக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்கள் கேட்டுக் கொண்டதையடுத்து வரிப் பகிர்வின் அடிப்படையில் வரும் 22-ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய தவணைத் தொகையான ரூ.47,541 கோடியுடன் மேலும் ஒரு தவணை சேர்த்து வழங்கப்படும் எனக் கூறினார். அதன்படி, மாநிலங்களுக்கு ரூ.95,082 கோடி விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் மீதான கலால் வரியை மத்திய அரசு ஏற்கெனவே குறைத்துள்ளது. இந்நிலையில் அந்தந்த மாநில மக்கள் தங்கள் மாநில அரசை, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யும் வரை அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.









