ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது.
தென் கொரியாவின் பூசான் நகரில் ஆசிய கபடி சான்பியன்ஷிப் தொடர் 2023 நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் ஈரான் அணியுடன் இந்தியா மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
முதல் பாதியின் முடிவில் 23 – 11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, இரண்டாவது பாதியில் சற்று தடுமாறியது. ஈரான் அணி விறுவிறுவென புள்ளிகளை குவிக்கத் தொடங்கியதால் ஆட்டம் சூடுபிடித்தது. இருப்பினும், ஈரானின் வேகத்தை கட்டுப்படுத்திய இந்திய அணி, 42 – 32 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையை 8-வது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.
ஆசிய கபடி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது, இந்திய வீரர்களின் திறமையை வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இதே உத்வேகத்துடன் இந்திய அணி செயல்பட வேண்டுமென்று தாம் விரும்புவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







