ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடக்கும்…ஆனால்…!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானே நடத்தும். ஆனால், இந்தியா விளையாடும் ஆட்டங்களை மட்டும், தேவைப்பட்டால் இறுதி போட்டி உள்பட அனைத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானே நடத்தும். ஆனால், இந்தியா விளையாடும் ஆட்டங்களை மட்டும், தேவைப்பட்டால் இறுதி போட்டி உள்பட அனைத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் இந்தப் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை, இந்த முறை பாகிஸ்தானில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

அதன்படி ஆசிய கோப்பையை பாகிஸ்தானுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்தது. ‘நடப்பாண்டு ஆசிய கோப்பையை ஏற்கனவே பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுவிட்டது. இப்போது இடத்தை மாற்றுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆசிய கோப்பை போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றினால், இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் பங்கு பெறாது.” என்று கூறியிருந்தது.

பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா தான், ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் உள்ளார். மார்ச் மாதத்துக்குள் ஆசிய கோப்பை போட்டிகளை நடத்துவது குறித்தான இறுதி முடிவுகளை எடுக்க வேண்டும். இந்நிலையில், ஆசிய கோப்பைப் போட்டியை பாகிஸ்தானே நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ‘ஆசிய கோப்பை குறித்தான இறுதி முடிவுகளை இனிதான் எடுக்க வேண்டும். ஆனால் மார்ச் மாதம் வரை போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றும் முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையை பாகிஸ்தானே நடத்தும். இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும்.. தேவைப்பட்டால் இறுதி போட்டி உள்பட அனைத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவோம்.’ என்று கூறியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.