நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார்.
சென்னை கோடம்பாக்கம் 112-வது வார்டில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், உள்ளாட்சி தேர்வுதான் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்று கூறினார். வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வந்தது போல், பொதுமக்களின் தேவையை கேட்டு செய்ய வேண்டும் என்றும் வைரமுத்து தெரிவித்தார்.
இதேபோன்று, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி 4-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது குடும்பத்துடன் வாக்களித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நல்லாட்சி, உள்ளாட்சியிலும் தொடர வேண்டுமென மக்கள் திமுகவை ஆதரித்து வாக்களிப்பார்கள் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
https://twitter.com/Vairamuthu/status/1494906182753918976
சென்னை ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமது குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையை சிங்காரச் சென்னையாக முதலமைச்சர் மாற்றுவார், என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார். இதனை மெய்பிக்கும் வகையில் சென்னையில் உள்ள, 200 வட்டங்களையும் திமுகவே கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வைத்தால், தேர்தல் தோல்விக்கு அதை காரணமாக காட்டி விடலாம் என்பதற்காக எஸ்.பி. வேலுமணி போராட்டம் நடத்தியதாக கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







