தலிபான்களின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக ஆப்கனைச் சேர்ந்த பாப் பாடகி அர்யானா சயீத் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கும், அமெரிக்க படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அண்மையில், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தங்கள் ராணுவ துருப்புகளை திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும் அவசரகதியாக நாட்டை விட்டு தப்பிய பாப் பாடகி அர்யானா சயீத், ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பாடல் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த அர்யனா சயீத், தலிபான்களின் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அமெரிக்க சரக்கு விமானம் மூலம் கத்தார் தப்பினார்.
இந்நிலையில், தலிபான்களின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும், அரசாங்கத்திடம் பிடிபடும் தலிபான்கள் எப்போதும் பாகிஸ்தானியர்களாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தலிபான்களின் பின்ன்ணியில் பாகிஸ்தான் இருப்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளதாகவும், அர்யானா சயீத் தெரிவித்துள்ளார்.









