ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்குகள் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017 ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தனது விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையம், பலரையும் விசாரித்தது.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதன்பிறகு ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி ஆணையம் இன்னும் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தெரிவித்தது.
இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு மற்றும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். அடுத்த வாரம் வழக்கு நிச்சயம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.









