அரும்பாக்கம் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைதானவர்களில் 2 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ், சக்திவேல், சூர்யா, ஸ்ரீவத்சன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மீதமுள்ள நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மாறி மாறி பொய் சொல்லி வந்ததால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையினர் தனது பாணியில் விசாரணை நடத்தி 10 கிலோ தங்கத்தை மட்டும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், மீதம் 4 கிலோ தங்கம் குறைவாக இருப்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் யாரிடம் அந்த நகைகள் இருக்கிறது என தெரியவில்லை. இதையடுத்து, மீதமுள்ள 4 கிலோ தங்க நகைகள் குறித்து விசாரிப்பதற்காக போலீஸ் காவல் கோரி எழும்பூர் நீதிமன்றத்தை நாடினர்.
இதையடுத்து, பாலாஜி மற்றும் சந்தோஷ் ஆகிய இரண்டு பேரை 5 நாட்கள் காவல் நிலையத்தில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி முருகன், சூர்யா சிறையில் அடைக்கப்படாத நிலையில் பாலாஜி, சந்தோஷ் ஆகிய நான்கு பேரையும் ஒரே அறையில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








