முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

ஆருத்ரா மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது லுக்அவுட் நோட்டீஸ்..!

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டன.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. அதேபோல அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரீஷையும் 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலும், ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் தொடர்பு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பாஜகவில் ஓ.பி.சி பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் இருந்து தனக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்ற உதவி வந்ததாக தகவல் வெளியானது. அதேபோல ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்ட ரூசோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

விசாரணைக்கு ஆஜராகாத நடிகர் ஆர்.கே.சுரேஷ், போலீசாரின் சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவர் போலீசாரிடம் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ1.13 கோடிக்கு தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆருத்ரா நிறுவன மேலாண் இயக்குநர் ராஜசேகர், மனைவி உஷாவை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆருத்ரா உட்பட 4 நிறுவனங்களின் வழக்குகள் பற்றிய விவரங்கள் அமலாக்கத்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும வழக்கில் தொடர்புடையய நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முடியாது என்று தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram