ராமநாதசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ருத்ராட்ச மண்டபத்தில் அமைந்துள்ள நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிவபிரானை வழிபடும் சைவர்கள்,  மார்கழி மாதம் பௌர்ணமி நாளில்…

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ருத்ராட்ச மண்டபத்தில் அமைந்துள்ள நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

சிவபிரானை வழிபடும் சைவர்கள்,  மார்கழி மாதம் பௌர்ணமி நாளில் திருவாதிரை
நட்சத்திரம் வரும் பொழுது அதனை தரிசித்து,  திருவெம்பாவை பாடல் பாடி
இறையருள் பெற்று நடராஜரை தரிசனம் செய்வது வழக்கம்.  இந்நிலையில்,  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடையானது அதிகாலை 2 மணி அளவில் திறக்கப்பட்டு முதலில் ஸ்படிகலிங்கம் பூஜை நடைபெற்றது.

அதன்பின்,  பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தில் வடகிழக்கு ஈசானி மூளையில்
அமைந்துள்ள ஒரு லட்சம் ருத்ராட்ச மாலைகளால் ஆன மண்டபத்தில் உள்ள நடராஜர்- சிவகாமி அம்பாளுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், தைலம், பன்னீர்,
திரவியம், மஞ்சள், தேன், சந்தனாதி, போன்ற 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள்
நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, கோயில் சன்னதியில் இருந்து மாணிக்கவாசகர் புறப்பாடாகி
பசுவிற்கு கோ பூஜையும், கோயில் யானை ராமலெட்சுமிக்கு ஜெக பூஜையும் செய்யப்பட்டு
தீபாராதனை காட்டப்பட்டு 6 திரைகள் நீக்கப்பட்டு நடராஜர் சன்னதியின் எதிரே
வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிறைவாக,  அலங்கரிக்கப்பட்ட நடராஜர் -சிவகாமி அம்பாளுக்கு 16 வகையான
தீபாராதனைகள் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு,  திருவெம்பாவை
பாடப்பட்டு தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.  நிகழ்ச்சியில்,  பக்தர்கள் ஏராளமானோர் அதிகாலை முதலே காத்திருந்து சுவாமி அம்பாள் தரிசனம் பெற்று சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.