மண் மணமும் கிராமியப் பண்பாடும் கமழும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை அரசுப் பள்ளி மாணவ – மாணவிகள் நடத்தி அசத்தி வருகின்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகள் கடந்த சில நாட்களாக சிறந்த கலைக் கூடங்களாகவே மாறியிருக்கின்றன. மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருவதே இதற்கு காரணம். தமிழகத்தின் பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளில் கலை பண்பாட்டுக் கூறுகளை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம்.
இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் என்பதற்கு திருவில்லிப்புத்தூரில் நடைபெற்ற கலைத்திருவிழாவே நல்ல எடுத்துக்காட்டு. இதில் 32 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கரகாட்டம், ஒயிலாட்டம், குழு நடனம் உள்ளிட்ட போட்டிகளில் அசத்தினர்.
இதேபோல சேலத்தில் நடைபெற்ற கலைத் திருவிழாவிலும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து படைத்த அந்த கலை நிகழ்ச்சிகளின் அழகையும் எழிலையும் எடுத்துரைக்கும் ஆற்றல் சொற்களுக்கு கிடையாது.
ஓமலூர் வட்டாரத்தில் 63 அரசு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலை திருவிழாவிலும் மாணவர்கள் தங்கள் கலைத் திறனை நிரூபிக்கத் தவறவில்லை. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். பத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு நாடகங்களையும் நடத்தி சிறந்த கலைஞர்களாக அவதாரம் எடுத்தனர்.
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவு, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவு, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஒரு பிரிவு என மொத்தம் மூன்று பிரிவுகளிலும், பள்ளி – வட்டாரம் – மாவட்டம் – மாநிலம் என நான்கு நிலைகளிலும் இந்த கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கிய இந்த கலைத் திருவிழா கடந்த 5ஆம் தேதியுடன் வட்டார அளவு வரை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
தற்போது மாவட்ட அளவில் நடைபெற்று வரும் இத்திருவிழா மாநில அளவிலான போட்டியுடன் நிறைவுபெறவுள்ளது. அதன்படி மாநில இறுதிப் போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும். சான்றிதழ்கள் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும். மாநில அளவில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்படுவர்.
கற்றல் செயல்முறைகளில் மாணவர்களை ஆர்வமுடன் ஈடுபட வைக்கும் கலைத் திருவிழா, மக்களைப் பற்றிய ஆழமான புரிதலையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் அரங்கேறி வரும் கலைத் திருவிழா வரவேற்கத்தக்க அம்சம் என்றே கூறலாம்.







