“தீவிரவாதிகளை கைது செய்வது போல் நள்ளிரவு தூய்மை பணியாளர்கள் கைது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

தூய்மை பணியாளர்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தீவிரவாதிகளை கைது செய்வது போல நள்ளிரவில் தூய்மை பணியாளர்களைக் கைது செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? 12 நாட்களாகச் சம்பள உயர்வுக்காகவும், நிரந்தர பணி வழங்கிடவும் போராடிய தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாகக் கைது செய்தது மிக மிக கண்டனத்திற்குரிய ஒரு விஷயம்.

உடனடியாக முதலமைச்சர், துறை சார்ந்த அமைச்சர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். இன்றைக்கு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

தங்கள் உரிமைக்காக போராடிய தூய்மை பணியாளர்களுக்கு இந்த அரசு நிச்சயம் அவர்கள் கோரிக்கைக்குச் செவி சாய்த்து உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். நள்ளிரவில் கைது செய்ததை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.