ராணிப்பேட்டை அருகே அரசு பள்ளியின் பூட்டை உடைத்து புத்தகங்களை எரித்த நபர் கைது! மதுபோதையில் அட்டூழியம் என விசாரணையில் தகவல்!!

ராணிப்பேட்டை அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பூட்டை உடைத்து புத்தகங்களை தீயிட்டு கொளுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.…

ராணிப்பேட்டை அருகே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பூட்டை உடைத்து புத்தகங்களை தீயிட்டு கொளுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்
கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து பள்ளியில்
வைக்கப்பட்டு இருந்த பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

மேலும் பள்ளியில் உள்ள மின்சாரம் கணக்கெடுக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து
விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன்(30)
என்பவர் மது போதையில் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

இவர் இதே பகுதியில் அடிக்கடி மதுபோதையில் பொது சொத்துகளை சேதம் விளைவிப்பது பொதுமக்களுக்கு இடையூறு தருவது உள்ளிட்ட செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், இது போன்று ரகளையில் ஈடுபடுவதால் அவரது மனைவி இவரை
பிரிந்து தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பூட்டை உடைத்து புத்தகங்களை தீயிட்டு கொளுத்திய விவகாரத்தில்  குமரேசனை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.