ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்!

இந்திய-சீன எல்லையில் வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தை சேர்ந்த ராணுவ…

இந்திய-சீன எல்லையில் வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் தேவஆனந்த், இந்திய-சீன எல்லைப் பகுதியில் ராணுவ தடவாள ஆயுதங்கள் மற்றும் உதிரி பாகங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர், கடந்த 30-ம் தேதி பணியை முடித்துவிட்டு, ராணுவ முகாமிற்கு மலைப்பகுதி வழியே ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராவிதமாக ராணுவ வாகனம் மலைப் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது, இதில், தேவஆனந்த் உட்பட 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேவஆனந்த் உடல், சிக்கிம் மாநிலத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சொந்த ஊரான லால்குடி அருகே உள்ள திண்ணியம் கிராமத்திற்கு எடுத்துவரப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் எம்பி திருச்சி சிவா, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அப்பகுதியில் உள்ள இடுகாட்டில், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தேவஆனந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.