ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – தொடரும் கைதுகள்… சிக்குவாரா ‘சம்போ’ செந்தில்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ‘சம்போ’ செந்திலுக்கு தொடர்புடைய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ‘சம்போ’ செந்திலுக்கு தொடர்புடைய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பிறகு 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ், என மேலும் 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே இதுதொடர்பாக மேலும் சிறையில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த ஹரிஹரன், பொன்னை பாலு, அருள், ராமு ஆகிய நால்வரையும் நேற்று போலீஸ் காவலில் எடுத்தனர். இதையடுத்து இவர்கள் நால்வரையும் புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வைத்து இன்று தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழக்கறிஞர் ஹரிகரனிடம், பிரபல ரவுடி சம்பவ செந்தில் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு நானும் அவரும் வழக்கறிஞர் என்று ஹரிகரன் பதிலளித்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில் போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகவே சில ஆண்டுகளாக இருக்கும் சம்போ செந்தில் பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்திருக்கிறது. அதனால் அவரை இன்னும் சில தினங்களில் தனிப்படை போலீஸார் பிடித்து விடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும் சம்போ செந்திலுக்கு தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்து பரங்கிமலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரவணன் மற்றும் சிவகுருநாதன் ஆகிய வழக்கறிஞர்கள் உட்பட 5 நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.