“தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை. திமுக இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் கட்சியில் பாடுபட்டவர்கள் ஒதுக்கப்பட்டு கிறிஸ்தவ
மெசினரிகள் பெரும்பாமையாக உள்ளனர்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு ரயில் நிலையத்தில் வைத்து அர்ஜுன்
சம்பத்தை தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். நேற்றைய தினம் கன்னியாகுமரியில் இருந்து நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள
இருந்த ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உள்ளதாகவும் எனவே
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இந்து மக்கள் கட்சியினர் திண்டுக்கல்லில் அர்ஜுன் சம்பத்தை விடுவிக்கக் கோரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ராகுல் காந்தி பயணம் தொடங்கிய நிலையில் காவல்துறையினரால் அர்ஜுன் சம்பத் விடுவிக்கப்பட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அர்ஜுன் சம்பத் கூறியதாவது:
இந்தியாவை இணைக்கும் விதமாக ராகுல் காந்தி தொடங்கியுள்ள இந்த நடை பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மக்கள் கட்சி சார்பாக கருப்புக் கொடி
காட்டும் இயக்கத்திற்காக ரயிலில் சென்றபோது சட்டவிரோதமாக காவல்துறையினர் என்னை கைது செய்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட இடம் ஒதுக்கி தந்த திமுக அரசாங்கம் எங்களது ஜனநாயக கடமையை எதிர்க்கும் விதமாக எங்களை கைது செய்திருக்கிறது. இந்த
விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்தியாவை பிரித்தது காங்கிரஸ் கட்சி
தான். இது இந்திய காங்கிரஸ் அல்ல; இத்தாலி காங்கிரஸ். கிறிஸ்தவ மிஷனரிகளின்
உதவியோடு இந்த பயணம் நடைபெற்று வருகிறது.
பெரும்பான்மையான இந்துக்கள் காங்கிரஸில் சிறுபான்மையினராகவும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்து மக்கள் கட்சியினர் நெல்லை, கன்னியாகுமரி, கோவை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார் அர்ஜுன் சம்பத்.








